மே 28-ம் தேதியான இன்று, உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமபந்தி விருந்து இன்று நடைபெற்றது.
அப்படி சென்னை திருவான்மியூரில் உள்ள தென்சென்னை தெற்கு மாவட்ட த.வெ.க சார்பில் தாமு என்பவர் சமபந்தி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியவற்றை இங்கே அறியலாம்...
“உலக பட்டினி தினமான இன்று, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகள் இதனை கவனித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் கட்சி நிர்வாகிகள் சமபந்தி விருந்தை நிர்வகித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
இனி வரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் வீட்டு திருமண நிகழ்ச்சி, காதணி நிகழ்ச்சி போன்றவை மண்டபங்களில் நடைபெறும் போது ஆதரவற்றோர், முதியவர்களை அழைத்து அவர்களுக்கும் உணவளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், உணவு மீதமாகிவிட்டால் அதை மக்கள் கீழேகொட்டி வீணடிக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட திருமண மண்டப மேலாளர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை அலைபேசியில் அழைத்தால் போதும். அவர்கள் வந்து உணவை பாக்கெட் செய்து, ஆதரவற்ற முதியவர்களுக்கு விநியோகம் செய்வார்கள்”
“ஜூன் 22 விஜய் பிறந்தநாளன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்வோம். பொதுக்கூட்டம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் தமிழக வெற்றில் கழகத் தலைவர் விஜய்தான் அறிவிப்பார். அவரின் அறிவிப்புக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்”
“2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா என்பது குறித்து, கட்சித் தலைவர்தான் முடிவெடுப்பார். அவரே அறிவிப்பார்”
“கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் சட்டப்பேரவை தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் கல்வி ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டும் எவ்வித பிரச்சனையும் இன்றி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”
எனக் கூறினார்.