முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில், முதலமைச்சர் பழனிசாமி தொடக்கவுரையாற்றினார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து வசதி, மின்சார வசதி உள்ளிட்டவற்றில் தமிழகம் சிறந்து விளங்குவதாக கூறினார். அத்துடன் தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மின்சார உற்பத்தியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குவதாகவும், ராணுவத் தளவாட உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறந்த நிறுவனங்களுக்கான ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில், 62 நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படுவதாகக் தெரிவித்தார்.
மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலமாக உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முன்னுரிமை அளிப்பதாக கூறினார். எனவே, தமிழகத்தில் தொழில் தொடங்கவும், அதிக முதலீடு செய்யவும் முன்வர வேண்டும் என முதல்வர் அழைப்பு விடுத்தார். பின்னர் தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழிற்துறை தொடர்பான கொள்கைகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.