கட்டண உயர்வைத் தொடர்ந்து, மாநகர பேருந்துகளில் சலுகை விலையில் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ்
பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 58 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
தமிழக அரசு கடந்த மாதம் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. உயர்த்தப்பட்ட கட்டணம் 50 சதவீதத்திற்கு மேல்
உள்ளதாக கூறி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து உயர்த்தப்பட்ட கட்டணம் சற்று
குறைக்கப்பட்டது. இருந்தும் அந்தக்கட்டணமும் அதிகம் என பொதுமக்கள் கூறிவருகின்றனர். டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை
உயர்வால் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கட்டண உயர்வுக்கு முன், விருப்பம் போல் பயணிக்கும் 1000 ரூபாய் மாதாந்திர சலுகைப் பயண அட்டையை, சுமார் 50 ஆயிரம் பேர்
வாங்கியிருந்தனர். தற்போது பேருந்துப் பயணக் கட்டணம் உயர்த்தப்டடதற்குப் பிறகு, பஸ் பாஸ் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 79
ஆயிரமாக அதிகரித்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணச் சீட்டு கட்டணம் உயர்த்தப்பட்டபோதிலும்,
ஆயிரம் ரூபாய் பஸ் பாசில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது இதற்கு முக்கிய காரணமாகும். எனினும் கட்டண உயர்வால்,
அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.