நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 52 மாணவ மாணவிகள் உட்பட 57 பேர் கடந்த 6ஆம் தேதி இரவு தனியார் சுற்றுலா பேருந்தில் ஊட்டிக்கு புறப்பட்டனர். இதையடுத்து நேற்று காலை ஊட்டி சென்றடைந்த அவர்கள், அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஊட்டியில் இருந்து நாமக்கல்லுக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில், நள்ளிரவு மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் கல்லார் அருகே சுற்றுலா பேருந்து வந்த போது, பேருந்தின் பின்புற டயரில் தீப்பற்றியதாக தெரிகிறது. இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகளை பேருந்தில் இருந்து பத்திரமாக கீழே இறக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து டயரில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. உடனடியாக இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.