பூந்தமல்லியில் அரசு பேருந்தின் டயர் வெடித்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக அரசு பொது போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தது. இதையடுத்து தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பாதிப்பு குறைந்த செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் பூந்தமல்லி பணிமனையில் இருந்து குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநின்றவூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பூந்தமல்லி நோக்கி வந்த அரசு பேருந்து, பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே வந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற வேன் மற்றும் கார் மீது மோதி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.
இதில் பேருந்தை ஓட்டி வந்த கேசவன்(52), என்பவருக்கும் பயணி ராதாம்மாள்(72), என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அதிஷ்டவசமாக 5 க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.