வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்டவை எரிக்கப்படுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் ஒருக்கிணைந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் இம்மருத்துவமனைக்கு உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும், நோயாளிகளை பார்க்க வருவோர் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இப்படிப்பட்டச் சூழலில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து எரிக்கப்பட்டு வரும் குப்பைகளால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி
வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறைக்கு அருகில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகள் பிரிக்கப்பட்டு பிணவறைக்கு எதிரில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பில் முக்கிய பங்காகாற்றும் மருத்துவர்கள் பயன்படுத்திய கையுறைகள், முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் ஆகியவையும் இதனுடன் சேர்த்து எரிக்கப்படுவதால் இது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை எரியூட்டப்படும் இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம், கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டு, மருத்துவ
மாணவர்களின் விடுதி, மகப்பேறு கட்டிடம் ஆகியவை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.