புரெவி புயல்: புதுக்கோட்டையில் பலத்த காற்றுடன் கனமழை... மீனவர்கள் அச்சம்!

புரெவி புயல்: புதுக்கோட்டையில் பலத்த காற்றுடன் கனமழை... மீனவர்கள் அச்சம்!
புரெவி புயல்: புதுக்கோட்டையில் பலத்த காற்றுடன் கனமழை... மீனவர்கள் அச்சம்!
Published on

புரெவி புயல் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் சேதமடையும் அபாய நிலை உள்ளதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யத் தொடங்கியது. ஆலங்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, கரம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவிலிருந்து தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

இதேபோல் கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பலமான காற்று வீசினால், கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளும், நாட்டுப் படகுகளும் சேதமடையும் அபாய நிலை உள்ளதாகவும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.


மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினமே அறிவித்திருந்த நிலையில், தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் மீன்வளத் துறையினரும் கடலோர காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், வருவாய்த்துறையினர் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதோடு, கனமழையின் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு முதல் மழையின் அளவு அதிகரித்துள்ள நிலையில், புயல் கரையைக் கடக்கும்போது மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதனிடையே, வங்கக்கடலில் உருவான புரெவி புயல் நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலையில் கரையை கடந்து, இன்று அதிகாலை நிலவரப்படி, பாம்பனுக்கு கிழக்கே 90 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com