புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை பங்குபெற அழைத்துச்சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 2 இளைஞர்கள் மற்றும் 2 காளைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்க விராலிமலையிலிருந்து மூன்று காளைகளை சிறிய ரக சரக்கு வாகனத்தில் அழைத்துக் கொண்டு வன்னியன் விடுதிக்கு சென்றிருந்தனர் காளையர்கள். தொடர்ந்து வாடிவாசலில் காளைகளை அவிழ்த்தப்பிறகு, மீண்டும் மூன்று காளைகளையும் சிறிய ரக சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுமார் ஐந்து பேர் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சிறிய ரக சரக்கு வாகனம் திருவரங்குளம் அருகே சென்றபோது புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி நோக்கி எதிரே சென்ற அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் சென்ற செவலூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (25), பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்கி (30) ஆகிய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் படுகாயம் அடைந்த நிலையில், இரண்டு காளைகள் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது.
படுகாயம் அடைந்த ஒரு காளை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தில் சிறிய சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேர், அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் என மொத்தம் 11 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் உடலும், உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைடியின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி காவல் துறையினர் சாலையில் கிடந்த விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.