பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஆனால் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஆஜராகவில்லை.
பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை சன் குழுமத்திற்கு பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது சகோதரரும், மத்திய முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணை சென்னையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணையை அடுத்து அக்டோபர் 3 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.