பி.எஸ்.என்.எல் அதிவேக இணைப்பை சன் குழுமத்திற்கு முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரும் மாறன் சகோதரர்கள் மனுக்கள் மீதான விசாராணை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்கட்சிக்கு பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.
அதன்படி, தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி குற்றம்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் இன்றுடன் முடிவடைந்தன. இதனையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சிபிஐ தனது தரப்பு வாதத்தை முன்வைக்கும் எனத் தெரிகிறது.