ஆரணி அருகே ‘தீரன்’ பட பாணியில் கொடூரமாக கொலை செய்து கொள்ளையடித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முனியதாங்கல் பகுதியில் வசித்த ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை லூர்துமேரி (69). இவர் திருமணம் ஆகாமல், வீட்டில் தனியாக வசித்து வந்தார். லூர்துமேரி உறவினர்கள் வெளிநாட்டிலும், வெளிமாநிலத்திலும் வசித்து வருகின்றனர். யாருமின்றி தனியாக வசித்து வரும் லூர்துமேரியை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள், கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு கொடூரமாக படுகொலை செய்தனர். அத்துடன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அதுமட்டுமின்றி லூர்துமேரி ஆசையாக வளர்த்த நாயையும் தீரன் பட பாணியில் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு சென்றனர். இதுதொடர்பாக ஆரணி ஏஎஸ்பி அசோக்குமார் தலைமையில் 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஒரு வார காலமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், லூர்துமேரி வீட்டின் அருகில் கறிக்கடை வைத்திருக்கும் இளையாஸ் மற்றும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஜோசப், யூசப், மூசா, ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய 4 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பணத்திற்காகவும், நகைக்காகவும் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 4 பேரும் ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.