ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்போருக்கு போக்குவரத்தில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக ஆந்திர எல்லை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த பாலாற்று நீரில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த மாதனூர் - உள்ளி பகுதிகளை இணைக்க கூடிய தரைப்பாலம், அடித்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த தரைப்பாலம் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக பெய்த கனமழையால், இதேபோல அடித்து செல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அரசு சார்பில் மணல் மூட்டைகள் ராட்சத பைப்புகள் மற்றும் மண் போன்ற பொருட்களைக் கொண்டு தற்காலிக சாலையாக அமைத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 1 வார காலத்திற்கு மேலாக தொடர் மழை பெய்துவரும் காரணங்களினால், பாலாற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து தற்போது தரைப்பாலம் மீண்டும் சுமார் 20 அடி அகலத்திற்கு பாலாற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூரில் இருந்து குடியாத்தம் மற்றும் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர் செல்லக்கூடிய மிகமுக்கியமான சாலை இது என்பதால், பள்ளி மாணவர்கள் - பணிக்கு செல்பவர்கள் என ஏராளமான பொதுமக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.