புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளிடமிருந்து தலா இரண்டாயிரம் ரூபாய் பெறும் வீடியோ வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்.உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, விலையில்லா ஆடுகளை வழங்குவதற்காக, கொன்னையூரில் உள்ள சந்தைக்கு வரவழைத்துள்ளனர். அப்போது பயனாளிகள் அனைவரும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே ஆடுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதால், 70க்கும் மேற்பட்டோர் தலா இரண்டாயிரம் ரூபாயை கொடுத்துள்ளனர். ஊராட்சி செயலர் சின்னகாளை மற்றும் பணித்தள பொறுப்பாளர் முருகேசன் ஆகிய இருவரும், பயனாளிகளிடமிருந்து பணம் பெறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பழனிசாமியிடம் கேட்டபோது, ஆடுகள் வாங்குவதற்காக அரசு ஒதுக்கும் பத்தாயிரம் ரூபாய் போதாது என்பதால், பயனாளிகளிடமிருந்து இரண்டாயிரம் ரூபாயை பெறும்படி, கால்நடை மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் வற்புறுத்துவதாகக் கூறினார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
விலையில்லா ஆடு விநியோகத்துக்கு பணம் பெற்றதாக உறுதியானால் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். புதிய தலைமுறையிடம் தொலைபேசியில் பேசிய அவர், அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்த கேட்டுக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.