வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் மார்க்கபந்து. இவரது குடும்பத்தார், 2 வருடங்களுக்கு முன்பாக அரியவகை பூவான ‘பிரம்ம கமலம் பூ' செடியை வாங்கி வந்து பூந்தொட்டியில் வைத்து வளர்த்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது.
இதை ஆச்சரியத்தோடு பார்த்த அவரது குடும்பத்தினர், பூவிற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும், தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், கூட்டமாக வந்து பூவை வணங்கி சென்றனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இமயமலை போன்ற மலை பகுதிகளில் மட்டும் அரிதாக காணப்படும் இந்த பூவானது, படைக்கும் கடவுளாக நம்பப்படும் பிரம்மாவுக்கு உகந்த பூவாக கருதப்படுவதால் ’பிரம்ம கமலம்’ என்று அழைக்கப்படுகிறது.
மேலும், குளிர்காலத்தில் மட்டுமே நள்ளிரவில் பூக்கும் இந்த பூ, நறுமணத்துடன் பூத்து அதிகாலைக்குள், அதாவது 3 மணி நேரத்தில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.