சாயல்குடி அருகே ஆன்லைனில் ஃப்ரீ பையர் கேம் விளையாடிய சிறுவன்... 90 ஆயிரம் பணத்தை இழந்த பெற்றோர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹிரித்திக் ரோஷன் ஃப்ரீ பையர் என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார். 12 வயதே ஆன அந்த சிறுவன் தனது அம்மாவின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி அந்த விளையாட்டை செல்போனில் விளையாண்டுள்ளார். இதன்மூலம் தாயின் வங்கி கணக்கில் இருந்த 90 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார் அந்த சிறுவன்.
இதுகுறித்து தெரியவர பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பெற்றோர் அந்த சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கினர். அதாவது 90 ஆயிரம் வரை 1,2,3 என எண்களை எழுதச்சொல்லி தண்டனை வழங்கியுள்ளனர். சிறுவர்களிடம் செல்போன் வழங்கும்போது பெற்றோர் கவனமாக இருக்க தவறியதே இதுபோன்ற இழப்புக்கு காரணம் என்பதை பலர் ஏற்க மறுக்கின்றனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை செந்தில்குமார் கூறுகையில், “கொரோனா காலத்தில் பள்ளிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன. அதனால் பையன் எங்கள் செல்போனை எடுத்து தனியாக கேம் விளையாடிக் கொண்டே இருப்பான். சமீபத்தில் வங்கிக்கு சென்று பாஸ்புக்கை பிரிண்ட் செய்ய சென்றோம். அப்போது 90 ஆயிரம் குறைந்திருந்தது. அதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது ப்ளே ஸ்டோர் மூலமாக ஃப்ரீ பயர் கேம் விளையாண்டுள்ளார்கள். அதற்கு பணம் பிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். நிர்வாகத்தில் இருந்து எஸ்.எம்.எஸ் எதுவும் அனுப்பவில்லையே சார் என்று கேட்டோம். அனுப்பியிருப்பார்கள், விசாரியுங்கள் எனத் தெரிவித்தனர். பிறகு பையனிடம் விசாரித்தோம். அப்போதுதான் தெரிந்தது அவன் ஏடிஎம் கார்டை வைத்து கேம் விளையாடியுள்ளான். வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக வரும் எஸ்.எம்.எஸையும் அழித்திருக்கிறான்.
இதுப்பொன்று எங்களுக்கு மட்டுமல்ல. பெரும்பாலானோருக்கு நடக்கிறது. அவர்கள் வெளியே சொல்வதில்லை. பையன்களையும் கண்டிக்கிறதில்லை. என் பையனை பொருத்தவரை 90 ஆயிரம் வரை 1,2,3 எழுது என்று கூறினோம். அவன் 3 ஆயிரம் வரை எழுதினான். அதன்பிறகு கை வலிக்கிறது. என்னால் முடியவில்லை எனத் தெரிவித்தான். ஒரு விழிப்புணர்வுக்காகவே இந்த தகவலை வெளியே சொல்ல வேண்டியுள்ளது. பிள்ளைகளின் கைகளில் செல்போன் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைப்பது தவறு” எனத் தெரிவித்தார்.