சிறு பிள்ளைகள் உண்டியலில் பணம் சேர்த்து ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஆசைப்படுவது வழக்கம். ஆனால், தான் சேமித்த பணத்தைக்கொண்டு நாட்டு மாடு ஒன்றை வாங்கி ஆர்வமுடன் வளர்த்து வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்.
ஈரோட்டை அடுத்த சிவகிரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, திலகவதி தம்பதியின் மகன் பொன் சிவவேல். சிறுவயது முதலே பெற்றோரும், உறவினர்களும் கொடுக்கும் சிறு தொகையையும் சேமித்தன் மூலம் கடந்த ஆண்டு 19 ஆயிரம் ரூபாயை சேமித்துள்ளார் பொன் சிவவேல். பின்னர் அதில் இருந்து 4 ஆயிரம் ரூபாயை வைத்து ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி வளர்த்த சிறுவனுக்கு, அந்த ஆடு மூலம் 2 குட்டிகள் கிடைத்தன.
தனது தாத்தா நம்மாழ்வார் மீது கொண்டிருந்த பற்றின் மூலமாக இயற்கை விவசாயத்தை நேசித்ததையும், மாடுகளின் சாணத்தை கொண்டு பஞ்சகாவ்யம் செய்ததையும் பார்த்து வந்த பொன் சிவவேலுக்கு தானும் ஒரு நாட்டு மாடு வாங்கி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். தன்னிடம் இருந்த பணத்திற்கு கன்றுகுட்டி கூட கிடைக்காத நிலையில், விடா முயற்சியுடன் இருந்த சிறுவனுக்கு மயிலை கிடாரி கன்றுகுட்டியை வாங்கி தந்துள்ளனர் அங்குள்ள மாட்டுச்சந்தை நிர்வாகிகள்.
மாட்டுக்கு சாய் விஜயலட்சுமி என பெயர் வைத்து அதனை ஆசை ஆசையாய் பார்த்துக்கொள்கிறான் பொன் சிவவேல். இன்றைய காலகட்ட சிறுவர்களைப்போல இல்லாமல், விவசாயத்திற்கு அடித்தளமாக இருக்கும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டும் பொன் சிவவேல், மற்ற சிறுவர்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல.