தொடரும் ஆழ்துளைக் கிணறு விபத்துகள்… யார் பொறுப்பேற்பது..?

தொடரும் ஆழ்துளைக் கிணறு விபத்துகள்… யார் பொறுப்பேற்பது..?
தொடரும் ஆழ்துளைக் கிணறு விபத்துகள்… யார் பொறுப்பேற்பது..?
Published on

நில உரிமையாளர்கள், போர்வெல் முதலாளிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் இந்த மூன்று முக்கோண புள்ளிகளுக்குள் விழுந்து தான் பலநூறு குழந்தைகள் இறந்து போகின்றனர். இவர்கள் முறையாக விதிகளை பின்பற்றாததும் அலட்சியமும் தான் பல ஆழ்துளைக் கிணறு விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது.

ஒரு இடத்தில் தண்ணீருக்காக ஆழ்துளைக் கிணறு தோண்டப்படும்போது, தண்ணீர் கிடைக்கும் சாத்தியம் இல்லை என தெரிய வந்தால் அதனை மூடாமல் அப்படியே விட்டு விட்டுப் போகும் அலட்சியம் இந்த மரணங்களுக்கு எல்லாம் துவக்கப் புள்ளி.

ஆழ்துளைக் கிணறு தோண்டி முடித்த பிறகு நிலத்தின் மட்டத்திற்கு மேலே சில அடி உயரத்தில் பைப் ஒன்று பொருத்தப்படும். இதில் துயரம் என்னவென்றால் தண்ணீர் கிடைக்காத கிணற்றுக்கு வீணாக பைப் எதற்கு என அதையும் சிலர் உருவி எடுத்துச் சென்றுவிடுகின்றனர். அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் சம நிலத்தில் துளை இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விடுகின்றனர்.

2012 ஜூன் மாதம் ஹரியானா மாநிலம் மானோசர் பகுதியில் மஹி என்ற ஐந்து வயது சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்த மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாள். 70 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த அந்தக் குழந்தை 85 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

மஹி குழிக்குள் விழுந்ததிலிருந்து சுமார் 15 நிமிடம் வரை இடைவிடாமல் அலறித் துடித்தாள். அந்த அலறல் சத்தம் கேட்ட பிறகே குழந்தை குழிக்குள் விழுந்தது தெரியவந்தது என்பது கூடுதல் துயரம்.

இதேபோல ஆண்டிப்பட்டி அருகே மூடப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான் 6 வயது மாயி. 2009 பிப்ரவரியில் நடந்தது இந்தத் துயரம், 30 மணி நேரம் போராடியும் குழந்தை நமக்கு சடலமாகத் தான் கிடைத்தது.

அதே ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் 3 வயது சிறுவன் கோபிநாத் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். கோபிநாத்தும் நமக்கு உயிருடன் கிடைக்கவில்லை.

அடுத்த ஓராண்டு இடைவெளியில் தமிழகத்தில் மீண்டும் ஒரு மரணம். 2011 செப்டம்பர் மாதம் நெல்லை மாவட்டம் கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் சுதர்சன் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். அதற்கு முன் கர்நாடக மாநிலம் பிஜாபூரில் 4 வயது சிறுமி பலியானாள்.

2013’ஆம் ஆண்டு கரூர் அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 4 வயது முத்துலட்சிமி உயிருடன் மீட்கப்பட்டாலும், பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். அதே ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கவனிப்பாரற்று இருந்த ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி தேவி தவறி விழுந்து இறந்தாள்.

2014’ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் விஜய் வாசவா என்ற குழந்தை 87 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. மீட்புப்பணிகள் உடனடியாக துவங்கப்பட்டது என்றாலும் சில மணி நேரத்திற்கு பிறகு குழந்தையை இறந்து போன நிலையில் தான் மீட்க முடிந்தது. மதுமிதா, மகேஷ், அன்கிட் என இந்தியா முழுக்க நீளும் இந்த பட்டியலில் சுஜித்தும் இணைந்து கொண்டான். இதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில உயிர்களை மட்டுமே நாம் காப்பாற்றியிருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் இப்படியான சம்பவங்களை நிகழும் போது மட்டும் அறிக்கைகளை விடும் அரசு பிறகு மறந்தும் கூட இதனை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதில்லை.

நில உரிமையாளர்கள் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு 15 நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்யப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்., பணி நடக்கும் இடத்தைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட வேண்டும். கிணற்றின் முகப்பைச் சுற்றி அரை மீட்டர் அளவுக்கு கான்கிரீட் மேடை அமைக்க வேண்டும் என பல வழிகாட்டுதல்கள் இருந்தாலும் இதனை நில உரிமையாளர்களும் கிராம நிர்வாகமும் கவனத்தில் கொள்ளவதில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com