தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவாக உள்ள நிலையில், இன்னமும் புத்தகங்கள் கிடைக்கவில்லை எனப் பள்ளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டும், பல பள்ளிகளில் இன்னமும் பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, 3,4,5,10,12ஆம் வகுப்புப் புத்தகங்கள் கிடைக்கவில்லை எனப் பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது. 1,6,9,11ஆம் வகுப்புகளுக்கு கடந்தாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதர வகுப்புகளுக்கு இந்தாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புத்தகங்கள் கிடைக்காததால் வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
அதிகமான பாடங்களைக் கொண்ட புதிய பாடப்புத்தகம் 1 மாதமாகியும் வழங்கப்படவில்லை என்றால், பாடங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும் எனக் கூறுகின்றனர் ஆசிரியர்கள். புத்தகங்களை விரைந்து மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கட்டணம் செலுத்திய தனியார் பள்ளிகளுக்கு விரைந்து புத்தகங்களை அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், புத்தகங்கள் கிடைக்காத பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள பாடப்புத்தக மண்டல அலுவலகத்தில் கட்டணம் செலுத்திய ரசீதைக் காண்பித்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.