'சூட்டிங்க்காக வாங்கிய பணத்தை இயக்குனர் கார்த்திகி திருப்பி தரவில்லை'-பொம்மன்-பெள்ளி தம்பதி குமுறல்

பொம்மன், பெள்ளி தம்பதியர் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
பொம்மன், பெள்ளி
பொம்மன், பெள்ளிகோப்பு புகைப்படம்
Published on

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப் பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் முதுமலை தெப்பக்காடு பகுதியைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிக்கும் இடையே உள்ள உறவை உணர்வுபூர்வமாமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. கார்த்திகி கொன்சால்வ் இயக்கியிருக்கும் இது சமீபத்தில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை தட்டிச் சென்றது.

இந்த ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

பொம்மன், பெள்ளி
பொம்மன், பெள்ளி

இந்நிலையில், பொம்மன், பெள்ளி தம்பதியர் தற்போது 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர்கள், ஆஸ்கர் விருது வாங்குவதற்கு முன், ஆவணப்படம் எடுக்கும்போது அன்பாக பழகியதாகவும், தற்போது எந்தவித உதவியும் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறி உள்ளனர். தங்களுக்கு வீடு, கார், இடம் மற்றும் வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளதாக இயக்குனர் கார்த்திகி பேட்டிகளில் கூறுவது பொய் எனவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் ஒரு திருமண விழா போன்று இடம்பெறும் ஒரு காட்சியை படமாக்கும் சமயத்தில், அவருக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து பணம் கொடுக்கவில்லை. உடனே எங்களிடம் உதவி கேட்டார். நாங்களும் தபால் நிலையத்தில் என் பேத்தியின் படிப்புக்காக போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்து அந்த காட்சியை எடுக்க உதவினோம். சுமார் ஒரு லட்சம் வரை வாங்கினார். அந்த பணம் இன்றுவரை எங்களுக்கு வரவில்லை என பொம்மன் பெல்லி தெரிவித்துள்ளனர்.

இதுவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான், எங்களை பார்க்க வந்தபோது ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். வேற யாரும் எதுவும் செய்யவில்லை என பொம்மன் - பெள்ளி தம்பதியர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர்.

கார்த்திகி கோன்சால்வஸ்
கார்த்திகி கோன்சால்வஸ்

பொம்மன் - பெள்ளி தம்பதியரின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க இயக்குனர் கார்த்திகி மறுத்துவிட்டார். ஆவணப்படத்தை தயாரித்த சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சனிக்கிழமை இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பொம்மன் - பெள்ளி தம்பதியரின் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், ஒப்பந்தத்தின்படி அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com