காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதியில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் குண்டு, வெடிக்க வைத்து அழிக்கப்பட்டது.
மானாம்பதியில் உள்ள கங்கையம்மன் கோயில் குளக்கரையில், கடந்த 26-ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்த நிபுணர்கள், வெடிவைத்து அழிக்க முடிவு செய்தனர். ஆனால், நீதிமன்ற அனுமதி கிடைக்காததால், அதனை அழிக்கும் முயற்சி ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், காயார் பகுதியில் உள்ள காவலர்கள் வெடிகுண்டு பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, மானாம்பதி ஏரிக்கு எடுத்து வரப்பட்டது. மணல் மூட்டைகளுக்கு இடையே 5 அடி ஆழ பள்ளம் தோண்டிய நிபுணர்கள், அதில் ராக்கெட் லாஞ்சர் குண்டை வைத்தனர்.
பின்னர், பாதுகாப்பான இடத்துக்குச் சென்ற அவர்கள், அதனை ரிமோட் மூலம் வெடிக்க வைத்தனர். அதற்கு முன், அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிதறிய வெடிகுண்டு பாகங்களைச் அப்புறப்படுத்தி வரும் நிபுணர்கள், அங்கு வேறு ஏதேனும் வெடிகுண்டு உள்ளனவா என சோதனை செய்து வருகின்றனர்.
முன்னதாக சில நாட்களுக்கு முன் கங்கையம்மன் கோயில் குளத்தில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.