கடலில் தவறி விழுந்து மாயமான ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் உடல் இறந்த நிலையில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கியது. கடற்படை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவருடைய நாட்டுப் படகில் அவரது மகன் தருண் மற்றும் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் ஆகியோருடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாலை 4 மணி அளவில் தனுஷ்கோடி பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.
அப்போது படகிலிருந்த கருப்பசாமி நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் தருண் மற்றும் பழனி ஆகியோர் கடலில் விழுந்தவரை தேடிப் பார்த்தபோது அவரைக் காணவில்லை என ராமேஸ்வரம் கடற்படை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக தவறி விழுந்த மீனவரின் நிலை கேள்விக்குறியாக இருந்த நிலையில், இன்று தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கி இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் அவரது குடும்பத்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரது குடும்பத்தினர் இறந்த கருப்பசாமியின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராமேஸ்வரம் கடற்படை போலீசார் மீனவர் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.