அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் புதிய தலைமுறையிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான விருதுப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, மல்யுத்த வீரர் பாஜ்ரங் புனியாவுக்கும், 2016ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபா மலிக்கிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, கபடி வீரர் அஜய் தாக்கூர், தடகள வீரர் முகமது அனஸ், கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ், பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் உள்ளிட்ட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பாடி பில்டர் பாஸ்கரன் சென்னை, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஆவார். இவர் ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். மேலும், உலக அளவிலான ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்தார்.
தனக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த பாஸ்கரன், “அர்ஜூனா விருதுக்கு தேர்வானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த பாடி பில்டிங் வீரர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. பாடி பில்டிங் இனி அதிக கவனம் பெறும். கடந்த ஆண்டில் தேசிய, ஆசிய, உலக அளவில் பாலி பில்டிங்கில் முதலிடம் பிடித்தேன். பாடி பில்டிங்கிற்கு அங்கீகாரம் அளித்து மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இது இளைஞர்கள் அதிக அளவில் பாடி பில்டிங்கில் ஈடுபட ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்தார்.