போதமலை: கரடு முரடான பாதையில் இவிஎம் இயந்திரத்துடன் நடைபயணம்
பதினாறாவது சட்டப்பேரவை தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது. ஆனாலும், சாலை வசதியற்ற கிராமங்களும், அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலையும் நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள போதமலை பகுதியில் மேலூர், கீழூர் மற்றும் கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைவசதியே ஏற்படுத்தப்படவில்லை. இதனால், கரடு முரடான பாதையிலேயே மக்கள் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
இந்நிலையில், அங்குள்ள 2 வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல தேர்தல் அலுவலர்கள் சிரமமடைந்துள்ளனர். கரடு முரடான பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலையில் சுமந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.