சென்னை காசிமேட்டில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகு ஆந்திராவில் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து கடலில் குதித்து தத்தளித்த மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றினர்.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள், மாரியப்பன் என்பவரின் படகில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்றனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணம்பட்டினம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சென்ற படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து தீ மளமளவென படகு முழுவதும் பரவியதால், மீனவர்கள் 9 பேரும் கடலில் குதித்தனர். நெடுநேரமாக கடலில் மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர், அவர்களை காப்பாற்றி கிருஷ்ணம்பட்டினத்தில் கரை சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து 9 மீனவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தீப்பிடித்து எரிந்த படகின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் எனவும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.