சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல்.-ன் அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதால் அரசுக்கு 440 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2004 முதல் 2007 ஆண்டு காலகட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலிருந்து, போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீட்டிற்கு கேபிள் பதித்து, அதி உயர் தொலைபேசி இணைப்புகளை கொடுத்து, தயாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளை சன் தொலைக்காட்சிக்கு கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை தயாநிதி மாறன் ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு கோடியே 78 லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐயின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் பிரம்மநாதன், வேலுச்சாமி, சன் டிவி தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் டிவி ஊழியர் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் மீது மோசடி, கூட்டுச்சதி, ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.