மதுரை மாவட்டத்தில் ப்ளுவேல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை அதிலிருந்து மீட்டு, கவுன்சிலிங் அளிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தால், பெற்றோர் அச்சமடையாமல் அவர்களை அரவணைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மதுரை மாவட்டம் முழுவதும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களை சந்தித்த மணிவண்ணன் தெரிவித்தார்.
வடமாநிலங்களில் சில உயிர்களை பறித்த ப்ளுவேல் விளையாட்டுக்கு நேற்று தமிழகத்திலும் ஒரு உயிர் பலியாகிவிட்டது. செல்போன் மூலம் 50 படிநிலைகளை எட்டிய மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனையடுத்து ப்ளுவேல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்களை அதிலிருந்து மீட்டு, கவுன்சிலிங் அளிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.