திறமை இருந்தும் வறுமையில் வாடும் பார்வையற்ற தம்பதி

திறமை இருந்தும் வறுமையில் வாடும் பார்வையற்ற தம்பதி
திறமை இருந்தும் வறுமையில் வாடும் பார்வையற்ற தம்பதி
Published on

தருமபுரி அருகே கல்வி மற்றும் திறமை இருந்தும் வசதியின்மையால் பார்வையற்ற தம்பதி வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றது.

தருமபுரி மாவட்டம், சிந்தல்பாடி அருகே சி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சி.நஞ்சம்மாள் (37), 4 வயது இருக்கும்போதே மஞ்சள் காமாலை நோய்க்கு கண்ணில் மருந்து கொடுத்ததால் இரு கண்களின் பார்வையையும் இழந்தார். பார்வையை இழந்தபோதும் மனம் தளராமல் எட்டாம் வகுப்பு வரை பர்கூரில் படித்த இவர்,   தொடர்ந்து படிக்க வீட்டை விட்டு வெளியேறி திருச்சியிலுள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் இல்லத்தில் தங்கி, பிளஸ் 2 வரை முடித்திருக்கிறார். 

திருமண தகவல் மையத்தின் உதவியோடு, பிறவியிலேயே பார்வையற்ற நிலையில் இருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் (பி.ஏ.) படிப்பை முத்துப்பாண்டி முடித்துள்ளார். இவர்கள் திருமணம் முடிந்ததும் கோவைக்கு இடம் பெயர்ந்தனர்.

அங்கே தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் தற்காலிகமாக கணினி இயக்குநராக பணியில் சேர்ந்தார் முத்துப்பாண்டியன். திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மகன்கள் பிறந்தனர். கோவையில் வேலை பறிபோன பிறகு, வாழ்க்கை நடத்த வழியில்லாமல், சொந்த ஊரான கடத்தூருக்கே அவர்கள் திரும்பினர். 

சொந்தமாக வீடு இல்லாத நிலையில் கடத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். வாழ்க்கை நடத்த போதிய வருவாய் இல்லை. ஆகவே ஊது பக்திகள், வாசனை திரவியம் மற்றும் பேனா வாங்கி தெருக்களிலும், பள்ளிகளிலும் விற்பனை செய்து வந்தனர். ஆனால் போதிய அளவு வருமானம் கிடைக்கைவில்லை. தொடர்ந்து பார்வையற்றோர் நடத்தும் இசைக்குழுவில் இணைந்து பாடல் பாடி, பணம் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களது மூத்த மகன் கனிஷ்கர் (9) தற்போது இலக்கியம்பட்டி கிறிஸ்தவ மிஷன் சேவை நிறுவனத்தால் நடத்தப்படும் இல்லத்தில் தங்கி 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் நேரு (4) கடத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். 


     
அரசு வழங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறப்பட்டு, இருவருக்கும் அரசின் உதவித் தொகையாக தலா மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அந்தத் தொகை போதுமானதாக இல்லையாம். ஆகவே குழந்தைகளின் எதிர்காலம் கருதி, முத்துப்பண்டி கோவை போன்ற பெருநகரங்களுக்கு சென்று மாற்று திறானளிகளுடன் இணைந்து பேருந்து நிலையங்கள், சிக்னல்கள், ரயில் நிலையங்களில்கையேந்தி வருவாய் ஈட்டுகிறார். 

இதுகுறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, வீடு மற்றும் தொழில் கடன் கண்டிப்பாக தரத் தயாராக உள்ளோம்.  ஆனால், எங்கள் துறைக்கான ஒதுக்கீடும்,  நிதியும் குறைவு. பயனாளிகள் பட்டியல் இருப்பதால், காத்திருக்க வேண்டும் என்கிறார்கள். “நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருக்க ஒரு வீடும், நிலையான வருமானத்திற்கு ஒரு பெட்டிக்கடையும் வைத்து தந்தால் பிழைத்துக் கொள்வோம்”  என்கிறது இந்தத் தம்பதி.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com