முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தனது தனிப்பட்ட தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், கூட்டணியின் மீது பழிபோட்டு இருப்பதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர். சேகர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் சோளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்ஆர். சேகர் கலந்து கொண்டார். செயற்குழு கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசு நீட் தேர்வை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 7.5 சதவீதமாக உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
அதேபோல வருகின்ற சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல பெட்ரோலுக்கு 5 ரூபாயும், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாயும் குறைத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்து அல்ல. ஊடகங்களில் வெளியான செய்தியே தவிர பாஜகவின் கருத்து அல்ல. இது குறித்து உயர் மட்டக் குழு முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தனது சொந்த தொகுதியில் சிறப்பாக பணியாற்றி இருந்தால் வெற்றி பெற்றிருப்பார் அதைச் செய்யாததால் அவர் தோல்வியைத் தழுவி தனது சொந்த தோல்வியை கூட்டணியின் தோல்வியாக மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால், அதற்கு அதிமுகவின் தலைமையே கொட்டு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.