கோவை கார் வெடிப்பு: முழு அடைப்புக்கு பாஜக மாநில தலைமை அழைப்புவிடுக்கவில்லை - அண்ணாமலை

கோவை கார் வெடிப்பு: முழு அடைப்புக்கு பாஜக மாநில தலைமை அழைப்புவிடுக்கவில்லை - அண்ணாமலை
கோவை கார் வெடிப்பு: முழு அடைப்புக்கு பாஜக மாநில தலைமை அழைப்புவிடுக்கவில்லை - அண்ணாமலை
Published on

கோவை மாவட்டத்தில் முழு அடைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு செயல்பாட்டைக் கண்டித்து அக்டோபர் 31-ம் தேதி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்ரவர்த்தி அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில், எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம் என்றும், ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

எதிர் மனுதாரராக உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில், முழு அடைப்புக்கு மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை என்றும், மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், முழு அடைப்பு நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டம் ஒழுங்கை காப்பதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com