தமிழக பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் பாஜகவினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்காமல் இருந்தனர். பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அப்போது வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் மீண்டும் பங்கேற்பார்கள் என தமிழிசை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஒருங்கிணைப்பின் கீழ் வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், அரசகுமார், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன், அனுசந்திரமெளலி, எஸ்.ஆர். சேகர் உட்பட மொத்தம் 27 பேர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருத்து மட்டுமே கட்சியின் கருத்து எனவும் கூறப்பட்டுள்ளது.