திமுக அமைச்சர் ஒருவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கட்சியின் மாநில மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், "இரண்டு மாநிலங்கள் ஆளும் ஆளுநரை (தமிழிசை செளந்தர்ராஜன்), அதுவும் ஒரு பெண்ணை மிகவும் தரக்குறைவாக பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு தமிழக மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். கருத்தியல் ரீதியாக திமுகவினரால் பேச முடியவில்லை என்பதால் இப்படி பேசி வருகிறார்கள்.
திமுகவினர் என்னுடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டாலும் ஒன்றும் கிடைக்காது. நேற்று 7 மணிநேரமாக காவல்துறைக்காக காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. என் மீது நடவடிக்கை எடுக்க ஒரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை. நேரம் வரும் பொழுது சிறை செல்வேன் என்கிறார்கள். ஆனால், திமுகவில் அதிகப்படியான கரும்புள்ளிகளை வைத்துக் கொண்டு, அவர்கள் இவ்வாறு பேசி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என எல்லோரும் அடங்குவர். அப்படி இருக்கும் பட்சத்தில், அவர்களில் பாதி பேர் சிறைக்கு செல்வார்கள்.
கடந்த வாரம் கூட திமுக அமைச்சர் ஒருவருக்கு., அமலாக்க துறை சம்மன் கொடுத்துள்ளது. அவர் 2 வார கால அவகாசம் கேட்டுள்ளார்" என அண்ணாமலை கூறினார்.