ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42). ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவர், வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் பாஜகவில் எஸ்சி எஸ்டி மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று சென்னை கொளத்தூரில் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இவர், அதன் பின்னர் காரில் பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் மற்றும் பைக்கில் வந்த மர்ம கும்பலொன்று, அவர் காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசியுள்ளது. இதையடுத்து காரில் இருந்து தப்ப முயன்ற அவர், சாலையின் எதிர் திசையில் ஓடியுள்ளார். அப்போதும் அவரை விடாமல் துரத்திய அந்த கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. அதற்குள் அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் சங்கரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த படுகொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி மாநகர காவல் இணை ஆணையர் விஜயகுமார் உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிக்க இதுவரை 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. முதல்கட்டமாக கொலை நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொலையாளிகள் யார் என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர்.