முதல்வர் அடிக்கடி நெல்லைக்கு வர வேண்டும் என்றும், நீங்கள் வந்தால்தான் மக்களுக்கு நல்ல சாலைகள் கிடைக்கும் எனவும் அரசு விழாவில் முதல்வரை நாசுக்காக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கலாய்த்துள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நல உதவிகள் வழங்கினார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக சட்டமன்ற கட்சி தலைவரும், நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பேசுகையில், “எதிர்கட்சி தொகுதி என்று கூட பாராமல் நெல்லை தொகுதிக்கு ஒரு கலைக் கல்லூரியை முதல்வர் தந்தார். அதற்கு நன்றி. பொதுவாக முதல்வர்கள் சரித்திரத்தில் இடம் பிடிப்பதற்காக எதையாவது செய்வார்கள். முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் சரித்திரம் படைக்கும் வகையில் ஒரு திட்டத்தை செய்ய வேண்டும் என எனக்கு ஒரு ஆசை.
அதன்படி, மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகள் இரண்டையும் ஒன்றாக இணைத்து விட்டால், எங்கள் மக்களுக்கு எல்லா நேரமும் தண்ணீர் கிடைத்து விடும். இது மத்திய அரசு திட்டமாக இருந்தாலும் மாநில அரசு முயற்சித்தால் நடக்கும் என்பதால் அன்போடு இந்த கோரிக்கை வைக்கிறேன். நெல்லை மாவட்டம் வீரமும் ஈரமும் நிறைந்த மாவட்டம். பல்வேறு எழுத்தாளர்களை கொண்ட மாவட்டம். ஒருங்கிணை மாவட்டத்தில் ஏராளமான சுதந்திர போராட்ட வீர்ரர்கள் உள்ளனர்.
இங்கு சைவமும் வைணமும் தலைத்தோங்கியுள்ளது. இங்குள்ள மானூர் குளம் மிகப் பெரியது. எனவே முதல்வர் பார்வையிட்டு அந்தக் குளத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய இரண்டு ஆண்டு முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆறு மருத்துவர் இருக்க வேண்டும்.
ஆனால் 3 பேர் தான் உள்ளனர். இன்னும் 3 மருத்துவர்கள் இருந்தால், இங்கேயே இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியும். எனவே அதற்கும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் வந்தால் சாலைகள் எல்லாம் புதிதாக போடுகிறார்கள். எனவே நீங்கள் அடிக்கடி வர வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நல்ல சாலைகள் கிடைக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.