தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள்.. நடவடிக்கை எடுக்க சரத்குமார் வலியுறுத்தல்!

சமூக ஊடகங்கள் மூலம் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக நடிகரும் பாஜக உறுப்பினருமான சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சரத்குமார்
சரத்குமார்எக்ஸ் தளம்
Published on

சமூக ஊடகங்கள் மூலம் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக நடிகரும் பாஜக உறுப்பினருமான சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகங்கள் என்பவை சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். பல முக்கியத் தகவல்களைப் பகிர்வதாகவோ அல்லது மக்களை மகிழ்விக்கும் விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயார் செய்வதாகவோ அவர்களது பணி அமையலாம். ஆனால் தற்போது பலவகையிலும் சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது. பிரபலங்களின் கருத்துகளை விமர்சிப்பதற்குப் பதிலாக அவர்களைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத்தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

இதையும் படிக்க: பெண் அதிகாரி நெற்றியில் குங்குமம் வைத்த காங். எம்.பி.. கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை.. அமைச்சர் பதில்

சரத்குமார்
“நான் பொறுப்புக்காக வரவில்லை.. பொறுப்பாக இருக்க வந்துள்ளேன்” - சரத்குமார்

பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை என்பதோடு, யாரது தனிப்பட்ட வாழ்விலும் தலையிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை என்பதே அடிப்படை சமூக நீதி. அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வம்காட்டும் நபர்கள் இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்களின் மனநிலை முதலில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று களமிறங்கி இருக்கும் நபர்கள் குற்றவாளிகளாகவே அடையாளம் காணப்பட வேண்டும்.

உயிர் உடைமைகளுக்குச் சேதம் விளைவித்தால் தண்டனை உண்டு என்பதுபோல, தனிப்பட்ட சட்டவிதிகளில் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றங்கள் வரவேண்டும். அரசியல் தலைவர்களும், சமூகத்தில் பொறுப்பான இடத்தில் இருப்பவர்களும் இதுபோன்ற போலியான சமூக ஊடகவாதிகளுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும். இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான பிரச்னையாகப் பார்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாக வாழ உரிமையுண்டு எனும்போது, அந்த அடிப்படை உரிமையை இதுபோன்ற சமூக ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக பறித்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

சரத்குமார்
சிவகாசி: தனியார் கல்லூரியின் ஆண்டுவிழா கொண்டாட்டம்: அறிவுரை வழங்கிய சரத்குமார்

இனிமேலும் பொய்களைக் கூறி, கீழ்த்தரமாக விமர்சித்து தங்கள் எல்லையைக் கடக்கும் நபர்கள் சுயபரிசோதனைசெய்து தங்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால், சட்டப்படியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் எல்.முருகனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். கடிதத்தின் நகலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவ்-க்கும் அனுப்பிவைக்க இருக்கிறேன். அனாவசியமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கன்வார் யாத்திரை | மோதிய கார்.. வெடித்த வன்முறை.. பள்ளிகளுக்கு விடுமுறை.. பாதுகாப்பில் போலீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com