செய்தியாளர் - அஜ்மீர் ராஜா
பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குக் காலை உணவுத் திட்டப் பொறுப்பாளராகப் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரன் சமையலறையில் புகுந்து அங்கிருந்த பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண் மகுடீஸ்வரனிடமிருந்து தப்பி சாமிநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்து மகுடீஸ்வரன் தலைமறைவானார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன் தலைமையில் தனிப்படை அமைத்துத் தலைமறைவான மகுடீஸ்வரனை தேடி வந்தனர்.
இந்நிலையில் மங்களூரில் தனியார் விடுதியில் மகுடீஸ்வரன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலீசார், மகுடீஸ்வரனை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவர் மீது, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மகுடீஸ்வரன் பாலியல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்கி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குப் பரிந்துரையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.