தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பாஜக இன்னும் வளரவில்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இந்திய தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் வார விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் பேசுகையில்...
அரசியல் நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான், கடல் என்று இருந்தால் அலை அடிக்கத்தான் செய்யும், ஒரு வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் சென்று கொண்டுள்ள இந்த வேளையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது நல்லதுக்கு அல்ல,
ராகுல் காந்தி கரத்தை வலுப்படுத்துவதற்கு நிர்வாகிகள் துணை நிற்க வேண்டும். கட்சியில் இது போன்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும், தமிழகத்தில் பாஜக கடந்த காலத்தில் இருந்த வாக்கு சதவிகிதத்தை விட அறை சதவீதம் அல்லது ஒரு சதவீதம் வளர்ந்து இருக்கலாம். ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவில்லை, திமுக அதிமுகவை போன்று பாஜக வளரவில்லை, தமிழகத்தில் பாஜக வளர்வதற்கான வாய்ப்புகளும் கிடையாது, மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதால் பணபலம் உள்ளிட்டவைகளை வைத்துக் கொண்டு ஒரு மாயை தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
எதிர்க்கட்சிக்கு வேற என்ன வேலை ஆளுங்கட்சி தவறை கண்டுபிடித்து குற்றம் கூறுவது தான் எதிர்க்கட்சிக்கு வேலை. அது போன்று தான் அதிமுக தற்போது திமுக தவறு செய்வதாகக் கூறி குற்றச்சாட்டை ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளனர், திமுக அரசில் குற்றம் நடந்துள்ளதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ள தான் வேண்டும், யார் ஆட்சியில் இருந்தாலும் ஒரு சில குறைகள் நடக்கத்தான் செய்யும், அதை வைத்துக் கொண்டு தமிழக முழுவதும் இப்படி தான் நடந்து வருகிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகளை தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொதுகணக்கு குழு கண்டுபிடித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், மெடிக்கல் கவுன்சில் தேர்தல் வெளிப்படை தன்மையோடு நேர்மையாக நடக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது என்று தெரிவித்தார்.