"வாழ்க்க முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிருவேன்" - காவலர்களுக்கு பாஜக வேட்பாளர் பகிரங்க மிரட்டல்

கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினரைப் பகிரங்கமாக பாஜக வேட்பாளர் மிரட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 ஏ.பி.முருகானந்தம்
ஏ.பி.முருகானந்தம்PT WEB
Published on

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா, மாற்றுப் பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை குழு, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகல் பார்க்காமல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில், ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், பறக்கும்படை அதிகாரி முருகேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தலைமைக் காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

காவலர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்!

அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது, பாஜ வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக, நிறுத்திவிட்டு வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துள்ளார். மேலும் அங்கிருந்த தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவைச் சேர்ந்த அலுவலர் முருகேசன் என்பவரின் அடையாள அட்டையைக் காட்டுமாறு கேட்டு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அங்கிருந்த காவலர்கள் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறியுள்ளனர்.

"உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்" - ஏ.பி முருகானந்தம்

இதனைக்கேட்டு, ஆத்திரமடைந்த வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், "மரியாதையாகப் பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்" என பகீங்கிரமாக மிரட்டல் விடுத்துப் பேசினார். அப்போது காவலர்கள், "போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது செல்லுங்கள்" எனக் கூறியுள்ளனர். அதற்கு அவர், " வேட்பாளரை எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள்? என்ன மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளார்களா? என்று தொடர்ந்து மிரட்டினார்.

பாஜக வேட்பாளர் ஒருவர், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பறக்கும் படை அதிகாரிகள் தரப்பில் குன்னத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

NGMPC057

தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வாகனங்களில் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com