தமிழகத்தில் இரண்டு துறை அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட 100 கோடி மற்றும் 120 கோடி ரூபாய் ஊழல் குறித்து, அடுத்த ஒரு வாரத்தில் ஆதாரத்தை வெளியிட உள்ளோம் என்றும், அந்த இரண்டு அமைச்சர்களும் பதவி விலக வேண்டிவரும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் அவர் பேசியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்து, தான் மகிழ்ச்சி அடைந்ததாக பிரதமர் மோடி எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அதேநேரம் முதலமைச்சர் மேடையில் பேசுயது, அவர்கள் கட்சி மேடை பேச்சாக இருந்தது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சமூக நீதி பற்றி நேற்று முதலமைச்சர் பேசுகிறார். அதே மேடையில் அமைச்சர் ராஜ கண்ணப்பனை பற்றியும் அவர் பேசியிருக்க வேண்டும். இந்த அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட்டார்கள், அவர்கள் எப்படி கடந்த காலங்களில் பேசினார்கள் என்பதை முதலமைச்சர் அதே மேடையில் சொல்லி ஆரம்பித்திருக்க வேண்டும்” என்றார். மேலும் அரசுக்கு பல கேள்விகளையும், தங்கள் தரப்பு வாதங்களையும் அவர் முன்வைத்தார். அந்த வகையில் அவர் எழுப்பிய சில கேள்விகள்:
“2021ல் அண்டை மாநிலமான கர்நாடகம் தமிழகத்தை விட ஆறு மடங்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆனால் தமிழர்களுக்கு அப்படி எந்த ஒரு பெரிய முதலீடும் ஏற்கப்படவில்லை. இது தான் திராவிடன் மாடலா? வருவாய் இழப்பு யாருக்கு ஏற்பட்டுள்ளது? முதல்வர் எதை சொல்கிறார்? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக 2014 - 2021 காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு வரி வருவாயை மத்திய அரசு கொடுத்துள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சில் என்ன முடிவு எடுத்து நிதி கொடுக்கிறது? ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவில், பிரதமரோ அமைச்சரோ தலையிட முடியாது. இது முதல்வருக்கு தெரியுமா தெரியாதா? 25 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதை ஏன் முதல்வர் மறைக்கிறார்? அதைப் பற்றியே அவர் ஏன் பேசவேல்லை?
கச்சத்தீவை இவர்களால் மீட்டெடுக்க முடியாது! பின் அதை வைத்து ஏன் நாடகம் ஆடுகிறார்கள்? என்ன அவசியம் உள்ளது? இந்த அரசு `கச்சத்தீவை நாங்கள்தான் தாரைவார்த்தோம்’ என்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கச்சத்தீவு எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். எங்களுக்கு கச்சத்தீவைஎப்படி மீட்க வேண்டும் என்றும் தெரியும். ஆர்ட்டிக்கிள் 6 திருப்பி கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழகத்தில் இரண்டு துறை அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 100 கோடி மற்றும் 120 கோடி ரூபாய் அளவிலான ஊழல் குறித்து சில ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளோம். அதை வெளியிட்டால் இரண்டு அமைச்சர்கள் பதவி விலக வேண்டிவரும்.
பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால் அந்த கோரிக்கைகளில் லாஜிக்-ஏ இல்லை! என் மீது வாரம் வாரம் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஆனால் ஏன் ஆர்எஸ் பாரதி-யும், வில்சனும் நீட் தேர்வு விலக்குக்காக உச்சநீதிமன்றத்தில் மனு போட்டு வழக்கை தொடுக்கக் கூடாது? தமிழ்நாட்டில் தமிழை அடிப்படை கல்வியாக வைத்து, கல்வியை கொண்டுவர முடியாமல் இருக்கிறார்கள். ஏன் இதை அவர்களால் செய்ய முடியவில்லை?” என அடுக்கடுக்காக பல கேள்விகளை அண்ணாமலை முன்வைத்தார்.
தொடர்ந்து நேற்றைய நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காததற்கு விளக்கமளித்த அவர், “தொழில்நுட்பக் கோளாறு, சில லிங்க் பிரச்னை காரணமாகவே நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்திருக்க வேண்டும். அதை தவிர வேறொன்றும் இருக்காது” என்றார்.