தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "வாக்குப்பதிவு குறைந்ததற்கு ஆளும்கட்சியின் அட்டூழியமே காரணம்" என்றுகூறி திமுக மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அப்போது பேசுகையில், “பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோவை, நெல்லை, திருச்சி வாக்குச் சாவடிகளில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. தாக்குதல்களை பொறுத்தவரை திருவண்ணாமலையில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 6 மாத கால கர்ப்பிணி சகோதரியொருவர் மீது ஆளுங்கட்சியினர் தங்களது தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இப்போது பாதிக்கப்பட்ட சகோதரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மதுரையில் பாஜக-வினர், திமுக-வினரால் மிக மோசமாக தாக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் இருக்கின்றனர். இதேபோல சென்னை, கோவையிலும் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, பலர் முதலுதவி பெற்றுவிட்டு வீடுதிரும்பும் வகையில் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது. பல இடங்களில், திமுக-வினர் அத்துமீறி கும்பல் கும்பலாக சென்று வாக்கு போட்டுள்ளனர். மாலை 5 - 6 மணி, கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, காவல்துறையினரைகூட தள்ளிவிட்டுவிட்டு கூட்டமாக சென்று கள்ள ஓட்டு போட்டு, வாக்களித்துள்ளனர்.
ஈ.வி.எம். மிஷன்களை உடைத்த சம்பவங்களும் நடந்துள்ளது. சில இடங்களில், வாக்குச்சாவடி மையங்களை முழுமையாக கைப்பற்றி, மக்களை அச்சுறுத்தி ஓடவைத்துவிட்டு கள்ள ஓட்டு போட்டுள்ளனர். கிட்டத்தட்ட இப்படி 40-50 வாக்குச்சாவடி மையங்களில் இப்படி வாக்குப்பதிவு நடந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை தேவை.
மேலும் நாளை வேட்பாளர் வெற்றி பெற்றதும் சான்றிதழ் கொடுத்துவிட வேண்டும். இரவு 7 மணி வரை குதிரை பேரம் நடத்த, தேர்தல் ஆணையம் வழிவகை செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்தி: சென்னை மாநகராட்சி தேர்தல் - எப்படி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை?