”அஞ்சல் அட்டையில் நம் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வோம்”- பாஜக அண்ணாமலை

”அஞ்சல் அட்டையில் நம் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வோம்”- பாஜக அண்ணாமலை
”அஞ்சல் அட்டையில் நம் முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வோம்”- பாஜக அண்ணாமலை
Published on
“ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் சொல்லுவார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
தருமபுரி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் இன்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "விவசாயிகள் உழைத்து உழைத்து தேய்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்க்கும் தலைவர்கள் நேரடியாக யாரும் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்கு விவசாயம் குறித்து தெரியாது என்பதாலேயே அவர்கள் இதை எதிர்க்கின்றனர். இடைத்தரகர்களிடம் சிக்கி தவித்து வரும் விவசாயிகளை காப்பாற்றுவதற்கும், அவர்களை முன்னேற்றுவதற்கும்தான் புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில் இது எந்த ஒரு விவசாயிக்கும் எதிரான சட்டம் இல்லை. பாஜக தொண்டர்கள் ஒவ்வொரு விவசாயிகளையும் சந்தித்து இச்சட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வரும் 20ஆம் தேதிக்கு மேலாக பாஜக சார்பில் ஒவ்வொரு விவசாயிகளிடமும் நேரடியாகச் சென்று விவசாய சட்டத்தை குறித்து விளக்கமாக நாம் எடுத்துக் கூற வேண்டும். 
மத்திய அரசு, விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகள் மட்டும் தான் முதல் மரியாதை கொடுக்கும் அளவில் தகுதியானவர்கள். அவர்களை நாங்கள் மதிக்கிறோம்.
நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை, இத்தேர்வு காரணமாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.  நீட் தேர்வை திமுக எதிர்ப்பதற்கான காரணம், அதிலுள்ள அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், என அனைவருமே கல்வி தந்தைகளாக இருக்கிறார்கள். நீட் தேர்வு இருப்பதால் அவர்களால் பணம் சம்பாதிக்க முடியாது என்று நினைக்கிறார்கள். அதனாலேயே திமுகவினர் இந்த தேர்வை எதிர்க்கிறார்கள்.
மற்றொரு பக்கம், தொடர்ந்து 70 ஆண்டுகாலவரலாற்றில் பல்வேறு அலுவலகங்கள் செயல்படாமல் உள்ளது. இதுபோன்று செயல்படாமலுள்ள நிறுவனங்களை தனியார் எடுத்து நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து சுதந்திர தின விழா மேடையில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சொந்தமானதாகதான் இருக்கும். இதை தனியார் நடத்துவதால் வரும் வருவாய் அரசுக்கு வரும். நான்கு ஆண்டுகளில் இதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்ற வழிவகை செய்யப்படும். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பதாக தவறான பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. எந்தவித காரணமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் வரும் 20ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தை அழைப்பு விடுப்பதற்கு காரணம், அவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்பதே... காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது போல, இந்தப் போராட்டத்தை அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விநாயகர் சதுர்த்தியிலும் இந்த அரசு அரசியல் செய்கிறது. ரம்ஜான், கிருஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் சொல்லுவார். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார். ஆகவே வருகின்ற 10ம் தேதி நாம் அனைவரும் ஒரு போஸ்ட் கார்டில் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து அனைவரும் போஸ்ட் கார்டு அனுப்ப வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com