”தமிழக நிதியமைச்சரை பதவி நீக்க வேண்டும்”- நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானபின் ஹெச்.ராஜா பேட்டி

”தமிழக நிதியமைச்சரை பதவி நீக்க வேண்டும்”- நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானபின் ஹெச்.ராஜா பேட்டி
”தமிழக நிதியமைச்சரை பதவி நீக்க வேண்டும்”- நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானபின் ஹெச்.ராஜா பேட்டி
Published on

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலமொன்று சென்றது. அப்போது காவல்துறையினர் ஊர்வலம் நடத்தியவர்களிடம், சில பகுதிகளில் ஊர்வலத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், அதனால் ஊர்வலம் செல்லக் கூடாது என்றும் கூறினர். அப்போது அங்கிருந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அவதூறாக பேசினார்.

அதனால் திருமயம் காவல்துறையினர் ஹெச்.ராஜா உட்பட ஊர்வலத்தில் பங்கேற்ற 20 பேர் மீது, 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஹெச்.ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்றும் கடந்த மாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது.

அதன்படி குற்றப்பத்திரிகையை திருமயம் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திருமயம் நீதிமன்றத்தில் ஜூலை 23-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜரானால் தன்னை கைது செய்து விடுவார்கள் என்றுகூறி அதே நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ஹெச்.ராஜா மனு கொடுத்து இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அந்த மனுவை தள்ளுபடி செய்து, கட்டாயம் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தது.

இதனையடுத்து ஜூலை 23-ஆம் தேதியான இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜராகினார். மேலும் அவருடன் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹெச்.ராஜாவின் மருமகனும் ஆர்எஸ்எஸ் நிர்வாகியுமான சூரியநாராயணனும் ஆஜராகினர்.

அப்போது ஹெச்.ராஜாவுக்காக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். காலை முதல் நீதிமன்றத்தில் பரபரப்பான நிலை நிலவியது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்திரா காந்தி, வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார். இதனை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஹெச்.ராஜாவை பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசும்போது, “நீதிமன்ற உத்தரவுப்படி இன்று திருமயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளேன். அனுபவம் வாய்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் எங்களுக்காக ஆஜராகி உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  தேச விரோதமாக பேசுவது, பிரதமரை இழிவாக பேசுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இங்கு யாரேனும் சமூக வலைத்தளத்தில் ஏதாவது கருத்து பகிர்ந்தால்கூட உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொள்கிறது. ஆனால் நாட்டையும், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், இந்து சமுதாயத்தினரையும் இழிவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ஏன் இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை. அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை என்றால் இந்து சமுதாயம் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடும்.

நீதிமன்றமே நக்சலைட் என்று கூறிய ஸ்டேன் சாமிக்கு தமிழக முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தியது தவறானது, கண்டிக்கத்தக்கது. அதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதேபோல விவசாயிகளை திருடர்கள் என்று இழிவுபடுத்திப் பேசிய தமிழக நிதியமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இவர் ஒருவரே போதும். தமிழக முதலமைச்சர் இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

90 நாட்களுக்குள் தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் இருக்கக்கூடிய 44,000 கோயில்களைச் சேர்ந்த 4,70,000 ஏக்கர் நஞ்சை புஞ்சை மானாவாரி நிலங்களில் 22,600 வணிகரீதியான கட்டடங்கள்; 33,600 மணைக்கட்டுகள் அனைத்தையும் யார் யாருக்கு ஒத்திகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்தவேண்டும். இந்துவை தவிர வேறு யாருக்கும் இந்த கட்டடங்களை கொடுத்திருக்கக்கூடாது.

ஆடிட்டர் ரமேஷ்  உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளின் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த நீதிமன்றம் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மயில்வாகணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com