வற்றாத ஜீவ ஊற்றுகள் என்றென்றும் சுரந்துகொண்டே இருப்பது போல் தான் தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவ ஊற்றாய் திகழ்ந்த ஒரு நூற்றாண்டு சாட்சியம் பிறந்ததினம் இன்று. கி.ராஜநாராயணன், தமிழ் இலக்கியத்தின் ஒரு முதுபெரும் எழுத்தாளர், தனித்துவமான கதை சொல்லி, கரிசல் இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்தவர்.
இலக்கியம் என்றாலே ஒரு உயர்வர்க்க விசயமாகவும் மற்றும் வரலாறு என்றாலே அது மன்னர்கள், போர்கள், தலைவர்களின் போராட்டங்கள் போன்றவை மட்டும் தான் என்றிருந்து சூழலில் தான் கி.ரா உதயமானார். அதன்பின் இலக்கியத்தையும், வரலாற்றையும் எளியவர்களுக்குமானது என்றாகிவிட்டு சென்றார் அவர்.
குறிப்பாக எளியவர்களின் கதையை எளிய மொழியிலேயே கதையாகி சாமானியர்களின் வாழ்வியலையும், அவர்களிடம் பரந்து கிடக்கும் கதையையும் கூட இலக்கியம் தான் என்று பதிவு செய்துவிட்டுச் சென்ற முக்கிய முன்னோடி அவர். கி.ரா, எழுத்தாளர் மட்டுமில்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர். விவசாயச் சங்கப் போராட்டங்களில் கைதாகி சிறைக்கும் சென்றுள்ளார். அபூர்வ ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்து ஆவணப்படுத்திய உ.சே.சாவின் பெயரில் கி.ராவுக்கு , தமிழக அரசு உ.சே விருது வழங்கி கெளரவித்தது. கடந்த வருடம் உடல்நல குறைவால் அவர் மறைந்தார்.
எத்தனையோ எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்களின் கதையையும், அவர்களது வாழ்வியலையும் பண்பாட்டையும் எந்தவித ஒப்பனைகளும் புனைவுகளுமின்றி அவர்களது மொழியிலேயே ஆவணப்படுத்தி, படிப்பவர்களுக்கும் முகம் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கை அனுபவத்தை தனது எழுத்தின் வழி மனத்துக்கு நெருக்கமாக கொடுத்துவிட்டு சென்றவர்.
கி.ரா, தன்னை சபையால் புறக்கணிக்கப்பட்டவர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர். ஆனால் தமிழிலக்கியத்துக்கு என்றென்றும் அவரது அடர்த்தியான படைப்புகள் அனைத்தும் முன்னோடியாகவே இருந்துவரும்.
கி.ராவின் கதைகளில் வரும் பெண்கள், வலிமையானவர்கள், கடுமையான உழைப்பாளிகள், யாருடைய நிழலிலும் வாழமாட்டார்கள். மேலும் பெண்களின் திருமண கனவுகள், நுண்ணுரவுகள், சஞ்சலங்கள், எண்ணவோட்டங்கள் என அனைத்தையும் எந்தவித முன்முடிவுகளுமின்றி, கலாச்சார கட்டுப்பாடுகளின்றி அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார். மேலும் சமூக கட்டுப்பாடுகள் மீது தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தவர் கி.ரா ஒரு பேட்டியில், “மனுஷனுடைய வாழ்க்கையை மட்டுமில்லை.. எதையுமே மதிப்பீடு பண்ண யாரால் முடியும்? இன்று நாம் மதிப்பீடு செய்து வைத்திருக்கும் ஒன்றை நாளை ஒருத்தன் வந்து மறுப்பான்.. நாளை மறுநாள் வந்து இன்னொருத்தன் அதையும் தப்பென்று சொல்லுவான். எது நிஜம், எது பொய் என்று எளிதாகக் கண்டுபிடிக்க முடியாதது தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே!” என்றார்.
கதவு, கிடை, கோபல்ல கிராமம், கரிசல் கதைகள், கொத்தைப்பருத்தி போன்றவை கி.ராவின் மிக முக்கிய படைப்புகள். தமிழ் இருக்கும் வரை கி.ராஜநாராயணனும் வாழ்வார். அப்படிப்பட்ட தமிழ் எழுத்துல பீஷ்மருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!