தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வருகிறது. அதன் மூலம் இனிமேல் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும்.
இங்குள்ள சுமார் 35 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே உள்ள முறைப்படி ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்டை கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்யவேண்டும்.
இந்த நடைமுறையின் மூலம் குடும்ப உறுப்பினர் மட்டுமின்றி வீட்டில் பணிபுரிவோர், தெரிந்தவர்கள் எனப் பலரும் பொருட்களை வாங்கக்கூடிய நிலை இருந்துவந்தது. அதில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்த நிலையில், தற்போது குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் விரல் ரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் கைரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்கும் நிலை உருவாகியுள்ளது.