பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டபடி எந்த ஒரு தொகையும் கொடுக்கவில்லை என்று நடிகை மீரா மிதும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராய் கலந்து கொண்டவர் மீரா மிதுன். சக போட்டியாளர்களுடன் அவர் நடந்து கொண்ட விதம் நிகழ்ச்சியில் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சிக்கு பிறகு வெளியான அவரது மிரட்டல் ஆடியோக்கள் இன்னும் அதிகமாய் பேசப்பட்டது. குறிப்பாக, மாடலிங்கில் இருந்தது முதல் தனக்குப் பிரச்னையாக இருப்பதாகக் கூறிய, ஜோ மைக்கேல் என்பவரை 'ஆள வச்சித் தூக்கு' என மீரா மிதுன் பேசியது திடுக்கிட வைத்தது.
ஜூலை 27ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியிலிருந்து மீரா மிதுன் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு, போட்டோ ஷூட், திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீரா மிதுன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது, “என்னை பற்றி நிறைய விஷயங்கள் தவறாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்க முடியாத அளவு எனக்கு பிரச்சனைகள் இருக்கின்றன. வேறு மாநிலம் சென்றால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. என் மீது 2 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது இரண்டுமே பொய்யானது.லஞ்சம் வாங்கி கொண்டு என் மீது போலீஸ் பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்” என கூறினார்.
மேலும் தொடர்ந்த மீரா மிதுன், “பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டபடி எந்த ஒரு தொகையும் கொடுக்கவில்லை. இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது சம்மந்தமாக தொலைக்காட்சிக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. ஆணாதிக்கம் உள்ள சமுதாயமாக உள்ளது. சமூக விழிப்புணர்விற்காக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். எந்த கட்சியுடன் சேர்ந்து செயல்படுவேன் என்று இப்போது கூற விரும்பவில்லை.மும்பையில் நான் தங்கி உள்ளேன். அங்கே பாதுகாப்பாக இருக்கிறேன். சட்டம் சரியாக உள்ள மாநிலத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு என உணர்கிறேன். இதற்கு பிறகும் தொலைக்காட்சி ஒப்பந்தப்படி எதுவும் கொடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த தொலைக்காட்சியும் பெரும் பிரச்னையை சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.