கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடுக்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சித் தலைவராக சக்திவேல் என்பவரும், துணைத்தலைவராக முருகன் என்பவரும் ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. இச்சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை சுதந்திரமான முறையில் ஜனநாயக ரீதியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கோவில் திருப்பணி தொடர்பாக பேசுவதற்கு கிராமக் கூட்டம் நடைபெற்றதாகவும், அப்போது திருப்பணிக்கு உதவ முன்வந்த இருவருக்கு உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.