ஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்

ஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்
ஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்
Published on

சைக்கிள் வாங்குவதற்காக 4 ஆண்டுகள் சேமித்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமியை, ஹீரோ நிறுவனம் பாராட்டியுள்ளது. 

விழுப்புரம் கே.கே.ரோடு சிவராம் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகநாதன், லலிதா தம்பதியரின் மகள் அனுப்பிரியா (8). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதற்காக தனது பெற்றோரிடம் தினமும் வாங்கும் காசுகளை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் அவர் சேமிப்பை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவில், மக்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளான செய்தியை கேட்டு சிறுமி மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். பின்னர், 4 வருடங்களாக தான் சேமித்து வைத்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்குமாறு தனது தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் சிறுமியின் தந்தையும், உண்டியல் பணம் 8 ஆயிரத்து 246 ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பியுள்ளார்.

தனது உண்டியல் சேமிப்பை கேரள நிவாரண நிதிக்காக சிறுமி அளித்தது செய்தியாக, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஊடகங்களில் செய்திகள் வெளியானது. சமூக வலைதளங்களிலும் செய்தி பரவி பலரும் பாராட்டினர். இந்த செய்தி ஹீரோ சைக்கிள் நிறுவனத்திற்கும் தெரியவந்துள்ளது. 

சிறுமியின் நல்ல உள்ளத்தை பாராட்டியுள்ள ஹீரோ சைக்கிள் நிறுவனம், அவருக்கு புது சைக்கிள் ஒன்றில் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, பன்கஜ் முன்ஜல் தனது ட்விட்டரில், “அன்புள்ள அனுப்ரியா, தக்க நேரத்தில் மனிதநேய ஆதரவுக் கரம் நீட்டிய உங்களது செயலை பாராட்டுகிறோம். எங்களது பிராண்ட்டின் புதிய சைக்கிள் உங்களுக்கு கிடைக்கும். தயது செய்து உங்களது முகவரியை எங்களது இ-மெயில்க்கு (customer@herocycles.com) அனுப்பி வையுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டில், “அனுப்பிரியா, உங்களுக்கு பாராட்டுக்கள்.. உங்களுக்கு உன்னதமாக உள்ளம் உள்ளது. உங்கள் வாழ்வில் நல்லது நடக்க வாழ்த்துகிறோம். உங்களுடைய வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு பைக் வழங்க ஹீரோ விரும்புகிறது. உங்களுடைய முகவரியை எனது அக்கவுண்ட்டில் ஷேர் செய்யுங்கள். உங்களது எனது வாழ்த்துக்கள். கேரளா மீண்டு வர பிராத்திக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com