கோவையில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கிய புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியபோது துணைவேந்தர் கணபதி பிடிபட்டார்.
உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்காக சுரேஷ் என்பவரிடம் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி 30 லட்சம் ரூபாய் பெற்றதாக புகார் எழுந்தது. இதற்காக சுரேஷிடம் துணைவேந்தர் கணபதி 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 29 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றதாகவும் தகவல் வெளியாகின. இந்த புகாரில், துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்றது உறுதி படுத்தப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே திருச்சியிலுள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதியிடம் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடப்பதாக கடந்த 2016-ஆம் ஆண்டே புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போது கிடைத்த சில ஆதாரங்களை புதிய தலைமுறையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.