மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. மனமகிழ்ச்சியோடு நடந்துமுடிந்த நிச்சயதார்த்த விழாவிற்கு பிறகு, மணமக்களின் உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது, பந்தியின் போது மணமகன் வீட்டார் மற்றும் மணமகள் வீட்டாரை சேர்ந்த இளைஞர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்கள் முதலில் லேசான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. லேசாக தொடங்கிய வாய் வார்த்தை பரிமாற்றம், பின்னர் தகாத வார்த்தையில் திட்டும் அளவுக்கு சென்றுள்ளது. பெண் வீட்டாரை, மாப்பிள்ளை வீட்டார் தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வாய்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.
இரண்டு வீட்டிலும் இளைஞர்கள் அதிகமாக இருந்ததால், இந்த சிறிய சண்டை பூதாகரமாக மாறியுள்ளது. இரண்டு வீட்டையும் சேர்ந்த இளைஞர்கள் மண்டப வாசலிலேயே ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கிக்கொண்டுள்ளனர். இளைஞர்கள் என தொடங்கிய இந்த சண்டை பெண்கள், ஆண்கள் என பெரிய சண்டையாக உருவெடுத்ததாக தெரிகிறது. இந்த சிறிய பிரச்சனை பெரியதாக மாறியதால் மணமகன் மற்றும் மணமகள் இரண்டு வீட்டாரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருமண மண்டபத்திற்கு வெளியே இரு தரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட நிலையில், இருதரப்பை சேர்ந்த பெரியோர்கள் இளைஞர்களை சமாதானபடுத்த முயன்றுள்ளனர். அதற்க்குள் சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த சீர்காழி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்ததுடன், அமைதியான முறையில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திச் சென்றனர்.
இந்நிலையில், அவ்வழியே சென்ற ஒருவர் இளைஞர்கள் தாக்கிக் கொள்வதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இரு வீட்டாரின் இளைஞர்களிடையே ஏற்ப்பட்ட இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்தும் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் இருவரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.