சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பெர்னாட் சேவியர் நாளை பதவியேற்கவுள்ளார்
சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் உயிரிழந்ததாகச் கூறப்படும் நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் நாளை பதவியேற்கவுள்ளார்.
இது குறித்து புதிய தலைமுறைக்கு பேசிய பெர்னாட் சேவியர், ''சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக நாளை பொறுப்பேற்கிறேன். உயர் அதிகாரிகள் என் மீது நம்பிக்கை வைத்து இந்த சூழலில் என்னை நியமனம் செய்திருக்கிறார்கள் ; அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன். மக்கள் எதிர்ப்பார்ப்பின்படி பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக நல்லபடியாக செயல்படுவேன்'' எனத் தெரிவித்துள்ளார்