செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பெங்களூரு பட்டரஹள்ளியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடைக்கு, நான்கு பேர் கொண்ட கும்பல், அதிகாரிகள் போல் வந்துள்ளனர். அப்போது கடையில் உரிமையாளரிடம், ஹால்மார்க் இல்லாமல் சட்டவிரோதமாக நகைகளை விற்பனை செய்கிறீர்கள் என்று கூறி சுமார் 40 நிமிடத்திற்கு மேல் சோதனை நடத்தியுள்ளனர். பிறகு 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை ஹால்மார்க் இல்லை எனக் கூறி எடுத்துக் கொண்டு, அடுத்த வாரம் தமிழகத்தில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு கூறி நோட்டீஸ் வழங்கினர்.
மேலும் தங்களை அடையாளம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் டி.வி.ஆர் சிஸ்டத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது உரிமையாளருக்கு ஐயம் எழுந்துள்ளது. இதையடுத்து நகைக்கடை ஊழியர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்தனர். தங்களை பின்தொடர்வதை அறிந்த அதிகாரிகள் போல் நடித்தவர்கள், இருசக்கர வாகனத்தை இடிக்க முற்பட்ட போது மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற காவல்துறையினர், கேரளாவை சேர்ந்த சம்பத்குமார், ஜோஷி மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சந்தீப் சர்மா, அவினாஷ் குமார் ஆகியோரை கைது செய்து, நகைகளை மீட்டனர்.